‘வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’

25 Nov

1984-ஆம் ஆண்டு. முனைவர் பட்டம் கையில். கல்யாணமான புதிதும் கூட.. நான் வேலை பார்க்க வந்த வந்த சில நாட்களில் ஶ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவர் என்னை அழைத்து, “தாலூகா அலுவலகத்தில் இருந்து உங்களை காடனேரிக்கு தேர்தல் வேலைக்குப் போகச் சொல்லி ஆணை வந்திருக்கிறது. போய் அந்தப் பணியை முடித்துக் கொடுத்துவிட்டு வாருங்கள்“ என்று சொன்னார். அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பர் டாக்டர் குணதிலகராஜ் அவர்களும் “இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் போய் விட்டு வாருங்கள்” என தைரியம் சொல்லவே நானும் அந்த ஊரை நோக்கிப்  பயணமானேன்.

காடனேரி அன்றைய காமராஜர் மாவட்டத்தில் ஒரு அழகான கிராமம். ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்று எங்கள் குழுவினருக்கு (என்னைத்தவிர 4 தேர்தல் அலுவலர்கள், அனைவரும் ஆசிரியர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர், துப்பாக்கியுடன்)  தேர்தல் ஓட்டுச்சாவடி என்று அறிமுகப்படுத்தப் பெற்றது. மாலையில் தாலூகா அலுவலகத்திலிருந்து ஒட்டு பெட்டிகள் மற்றும் ஓட்டுச் சீட்டுகள் வந்தன. இரவுக்குள் நாங்கள் ஓட்டுச் சீட்டு முதலியவற்றை சரிபார்த்து ஒட்டுபதிவிற்கு எங்களை ஆயத்தபடுத்திக் கொள்ளவேண்டும். அடுத்தநாள் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு.

அடுத்தநாள் காலையும் வந்தது. அந்தந்தக் கட்சிக்கான தேர்தல் முகவர்கள் வந்தார்கள். தங்களை அறிமுகப்படுத்திகொண்டார்கள்.  அதில் அதிமுக மற்றும் திமுக முகவர்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் மற்றவருக்குப் பரிபூரண ஒத்துழைப்புக் கொடுக்கின்ற ஒரு சூழ்நிலையில் ஓட்டுபதிவு நேரம் எப்போது வரும் என அனைவரும் காத்திருந்தோம். அப்போது என்னிடம் திமுக முகவர் மெதுவாக வந்து “சார், பூத்தின் எதிரில் இருக்கும் வீட்டுச் சுவரில் அதிமுக தலைவர் எம்.ஜி. ஆர். படம் (அப்போது அதிமுக தலைவர் நியூ யார்க் புருக்கிளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்; அப்போது எடுத்த படம்) போட்ட போஸ்டர் உள்ளது. தேர்தல் விதிகளின்படி அதை அகற்றும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

எனக்கும் அது நியாயமாகவே பட்டது. என்னுடன் பணிபுரியும், தேர்தல் பல கண்டு ‘பழம்தின்று கொட்டைபோட்ட’ தேர்தல் அலுவலர்களும், அது நியாயம்தான் என்றனர். உடனே இந்த நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த அதிமுக முகவரும் முழுமனஇசைவுடன் எதிர்வீட்டுக்காரரைச் சந்தித்துப் பேசி உடனே அந்த போஸ்டரை அகற்றிவிட சம்மதமும் பெற்றுவிட்டார்.  இவையெல்லாம் கணநேரத்தில் முடிந்துவிடவே அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

அதிமுக முகவர் எதிர்வீட்டுகாரரின் வீட்டில் இருந்து ஏணி ஒன்று எடுத்துவந்து சுவரில் சாய்த்து அதன் மேலே ஏறுகையில் அருகிலிருந்து ஒரு குரல் கேட்டது. அது ஒரு மூதாட்டியின் குரல். “எலேய், நில்லு. போஸ்டரைக் கிழிச்சிட்டு நீ பாட்டுக்கு போயிறல்லாம்னு  மட்டும் நெனைச்சிகிராதே. நீ தலைவர் படத்தைக் கிழிக்கப்போயி ஒடம்பு சரியில்லையின்னு வெளிநாட்டுக்கு வைத்தியம் செய்யப் போயிருக்கிற தலைவருக்கு  ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நா சும்மா இருக்கமாட்டேன், தலைவர் படத்தைத் தொட்ட, நீ செத்த. ஆமா.”

சென்னையிலிருந்து ‘வாழ்தல்   வேண்டி ஊழ்வினை துரப்ப’ (நன்றி: இளங்கோவடிகள்) ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பஞ்சம் பிழைக்க  வந்த எனக்கு  அது ஒரு இடியோசைபோலக் கேட்டது. ஓட்டுச்சாவடியின் தலைமை அலுவலர் (நான்தான்!) இடியோசைகேட்ட நாகம் போல நடுநடுங்க, மற்ற அலுவலரும் செய்வதறியாது சிலைபோல்  நின்றனர்.   ஏணியின்மேலே ஏறிய அதிமுக முகவர் அதேவேகத்தில் கீழே இறங்கிவிட்டார்.

வந்ததே சோதனை அடுத்து. அதுவரை பொறுமைகாத்த திமுக முகவர் என் அருகில் வந்து, “சார், சாவடியிலிருந்து 200 அடி தூரத்திற்குள் இருக்கும் அந்த போஸ்டரை தேர்தல் விதிப்படி அகற்ற உங்களால் முடியாது போலிருக்கிறது. அதனால் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும். எனக்கு சிறிது பெயிண்டும் ஒரு பிரஷ்ஷும்  கொடுத்தால் என்கட்சியின் உதயசூரியன் சின்னத்தை ஓட்டுச் சாவடி சுவரில் அங்கிங்கு வரைஞ்சுக்கிறேன். நீங்கள் எனக்கு கட்டாயம் உதவவேண்டும்” என்று பணிவாகக் கேட்டுக்கொண்டார்.

நான் அரசுச் சார்பாக எங்களுக்குத் துணையாக வந்த போலீஸ்காரரின் முகத்தைப் பார்த்தேன். ஒன்றும் பதிலில்லை. ஏதாவது தகராறு ஏற்படுமா அதைத் தவிர்க்க வழியுண்டா எனும் கேள்வியுடன் என் சக அலுவலர்களைப் பார்த்தேன். அவர்களும் பரிதாபமாகவே முகத்தை வைத்துக்கொண்டனர்.

திடீரென என்மனதில் ஒரு மின்னல் வெட்டியது. அதிமுக முகவரிடம் எதிர்வீட்டுக்காரரை உடனே அழைத்துக்கொண்டு வரமுடியுமா எனக்கேட்டேன். உடனே அவரும் வந்தார். என் கையில்  இருந்த முந்தைய நாளின்   செய்தித்தாளை எடுத்து எதிர்வீட்டுக்காரர் கையில் திணித்து, “சார் வீட்டில் கொஞ்சம் கூழ் இருந்தால் அதைகொண்டு இந்த பேப்பரை அந்த போஸ்டரின் மேல் கொஞ்சம் ஒட்டிவிடுகிறீர்களா” என்றேன். அவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு உடனடியாக அப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். பாட்டியின் முகத்தில் மந்தகாசப் புன்னகை. நிலைமை கட்டுக்குள் வந்ததாக நினைத்து அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

எல்லாம் முடிந்தபிறகு எங்களுக்குக் காவலாக வந்திருந்த போலீஸ்காரரைக் கேட்டேன், :”சரி ஏதாவது கலவரம் நடந்திருந்தது என்று வச்சிக்குங்களேன். அதை சமாளிக்க உங்கள் துப்பாக்கியில் குண்டு நெறைய வச்சு இருப்பீர்கள் இல்லையா?”  அந்தக் கேள்விக்குப் பதிலாக அவர் அனுப்பிய மவுனப்புன்னகைக்கு அர்த்தம்  இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. (அண்மையில் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் வைத்த வித்தியாசமான கோரிக்கையைப்  (மத்தியப்பிரதேசத்தில்   உள்ள அனைத்துக்குளங்களிலும்  உள்ள தாமரைப் பூக்களை வெளியில் தெரியாமல் மூடிவிடவேண்டும்) படித்தபின் என் நினைவுக்கு வந்தது இந்த நிகழ்ச்சி).

Leave a comment